Sunday, July 24, 2011

செல்வாவின் வித்தியாசமான சிந்தனை!

செல்வா ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். செல்வாவின் திறமை கண்டு வியந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வாவிடம் ஒரு பொருளை விளம்பரப்படுத்த வித்தியாசமாக முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

செல்வாவும் அந்தப் பொருளினைப் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொண்டு தனது அறைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் சிறு பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய கடைக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் துணைக்கு வரும்படியும் செல்வாவை அழைத்தார்.

" என்ன பிரச்சினை ? " என்றார் செல்வா.

" யாராச்சும் SMS அனுப்பினா அரை மணிநேரம் கழிச்சுதான் எனக்கு வருது , அதான் என்னனு பாக்கணும்" என்றார் நண்பர்.

" இதுக்கு ஏன் கடைல கொடுக்குறீங்க ? , உங்களுக்கு SMS அனுப்புறவர்கிட்ட அரை மணிநேரம் முன்னாடியே அனுப்ப சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சதுல! " என்றார்.

இதற்குப் பிறகு அந்த நண்பர் எதுவும் சொல்லமால் செல்வாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வா அந்த விளம்பரத்திற்குத் தேவையான ஒரு வித்தியாசமான கற்பனையை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு மேலாளரிடம் சென்றார்.

செல்வாவின் கற்பனையைப் படித்துப்பார்த்த அவரது மேலாளர் தனது வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அப்படி என்னதான் செல்வா வித்தியாசமாக எழுதித் தொலைத்தார் ? செல்வா எழுதிய வித்தியாசமான கற்பனை இதோ!


******   போன் விளம்பரம்!   
****** 

*.எங்கள் போன் விலை மற்ற போன் விலைகளைக் காட்டிலும் மிகக் குறைவு , மற்ற போன்களின் விலை 4000 என்றால் எங்கள் போன்களின் விலை வெறும் 6000 மட்டுமே!

*.எங்கள் போன்கள் மிகமிக வலிமையானவை. எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் உடனே உடைந்து போகக்கூடியவை!


*.மிகச்சிறந்த பேட்டரி வாழ்நாளை உடையவை. ஒருநாளைக்கு 24 மணிநேரம் சார்ஜ் செய்தாலே 10 நிமிடம் வரை பேட்டரி சார்ஜ் நிக்கக்கூடியது!

1 comment:

  1. செல்வாவின் மூளை விற்பனைக்கு வருகிறது. தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.

    ReplyDelete