Monday, August 29, 2011

ரத்தக் கறை படிந்த கவிதை


இந்தக் கவிதையில்
பச்சை ரத்தத்தின்
வாசனை அடிக்கலாம் உங்களுக்கு ..

ஏனெனில்
இப்போதுதான் ஒரு காதலை
மறுத்து விட்டு வந்திருக்கிறேன்
வாழ்வின் முதன் முறையாக
சொருகப்பட்ட கத்தியின் மறுபுறம்
நானில்லை என்பதை
நிம்மதியாக உணர்ந்தேன்
ஆனால் பொறுங்கள்
என்னைக் குற்றம் சொல்ல
உங்களுக்கு அதிகாரம் இல்லை
உங்களால் மறுக்கப் பட்ட
காதல் கடிதங்களும்
என்னைத் தவிர வேறு யாரும்
வாசிக்காத கவிதைகளும்
என் வீட்டுப் பரணில்
மறைக்கப் பட்ட பிணங்கள் போல்
இன்னும் அழுகிக் கொண்டிருக்கின்றன
அவற்றின் விஷக் காற்றில்
நான் இன்னமும்
நள்ளிரவில் சுடுகாட்டுநாய் போல்
அலறிக் கொண்டே இருக்கிறேன்

என் முறை
இனி இவ்வுலகில்
வரவே வராது என்றிருந்த போதுதான்
அவள் வந்தாள்..
இங்கு சர்ப்பங்களை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்
என்பதை
அவளைக் கண்ட பிறகே உணர்ந்து கொண்டேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு பார்த்தீனியச் செடி போல
அவள் மனதில்
நான் வளர்வதை
புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன்
அதை அழிக்க
நான் எதுவும் செய்யவில்லை
ஏன் செய்ய வேண்டும்?
இது என் முறை..
கள்ளி எனத் தெரியாமலே
கள்ளி வளர்ந்தது
கவிதை செய்து
கனவு நெய்து
இன்று காலை
பூவுடன் வந்து நின்றது
நான் மறுப்பெனும்
விஷத்துடன் தயாராக இருந்தேன்..
நிராகரிப்பை நம்பவே முடியாது
மெல்ல அவள்
கண்ணிலிருந்த கனல்
அணைந்து சாம்பாலாவதை
மனம் கரைந்து
உடல் தளர்ந்து
நடந்து போவதை
பார்த்தேன்
இனி அவள் இறக்கும் வரை
அவள் நினைவில் கடுக்கும் முள்ளாய்
நான் இருப்பேன்
என்ற திருப்தியுடன் வந்து
இக்கவிதையை எழுதுகிறேன்
ஆம்
உங்களில் சிலருக்கு
இக்கவிதையில்
உடைந்த ஒரு இதயத்திலிருந்து
ஒழுகிய உதிரத்தின்
உப்பு வீச்சம்
அடிப்பதாய்த் தோன்றினால்
அது சரிதான்.
- போகன்

வந்தியத் தேவனின் காதல் ..


இப்போதெல்லாம்
என் கவிதைகளைப் படித்துவிட்டு
யாராவது என்னைத்
தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள்..
ஆனால் ஒவ்வொருவரும்
வெவ்வேறு மனச் சித்திரத்தோடு வருகிறார்கள்.
சிலர் மார்புவரை
தத்துவத்தாடி நுரைத்துத்
தொங்கும் கிழவனாக
என்னை உருவகித்துக் கொள்கிறார்கள்..
அவர்கள் வாழ்வு முழுதும்
ஒற்றைச் சொல்லில்
தங்கள் துயர் அனைத்தையும்
துடைத்தெறிந்துவிடும்
ஒரு குருவைத்
தேடி அலைபவர்கள்
என யூகிக்கிறேன்
சிலர் என்னை
எப்போதும் புகையும்
துப்பாக்கியுடன் திரியும்
புரட்சிக் காரனாக
கற்பனை செய்து கொள்கிறார்கள்
அவ்வாறு வருபவர்கள்
பனியன்களில் இருந்து மட்டும்
பத்து விதமான
சே குவேராக்களை நான் அறிவேன்.
இன்னும் சிலர் 
மலர்மை கொஞ்சும்
ஒரு பெண்ணை எதிர்பார்த்து வருகிறார்கள்
அவர்கள் என்னுடன்
'சேர்ந்து '
ஒரு கவிதை எழுதும்
கனவோடு வருகிறார்கள்
வேறு சிலர்
ஏதாவது பெரிய குற்றம் ஒன்றைச்
செய்துவிட்டு வருகிறார்கள்
அவர்கள் எதிர்பார்த்து வருவது
பாவ மன்னிப்புத் தண்ணீருடன்
ஒரு பாதிரியை ...
பெண்களில் அநேகம் பேர்
செத்துப் போன
அவர்கள் அப்பாக்களைத்
தேடியே வருகிறார்கள்
அல்லது
அவர்களைத் துரத்தும்
இருத்தலில் இருந்து விடுவித்து
மார்பு நெருங்க
அணைத்துத் தூக்கி 
குதிரை மேல் இருத்தி
காவிரிக்கரை முழுதும்
செலுத்திப் போகும்
ஒரு வந்தியத் தேவனாய் நான் இருப்பேன்
என்று கற்பனையில் வருகிறார்கள்
எனக்கு சைக்கிள் கூட
ஓட்டத தெரியாது
என்று தெரிந்ததும்
அவர்கள் திரும்பி வருவதே இல்லை
பெரும்பாலான நபர்களை
கீழ்வீட்டுப் பெண்மணியே
அப்படி யாரும் இல்லை
என்று விரட்டிவிடுகிறாள்
அவள் எனை
யார் முகமும்
பார்த்துப் பேசாத
மூன்றுமாத வாடகை தராத
சந்தேகக் கஞ்சாக் கேசாகவே
அறிந்திருக்கிறாள்
இருப்பினும் அவளையும் மீறி
யாராவது வந்துவிடுகிறார்கள்
இதோ இப்போது கூட
யாரோ அழைப்பு மணியைத்
துன்புறுத்துகிறார்கள்
கணினியில் இருந்து
இந்தக் கவிதை காயாத கையுடனே
எழுந்து கதவு திறக்கிறேன்
நீலப் பூக்கள்
ஒழுகும் சுடியில்
ஒட்டகச் செருப்பில்
திகிரிக் கண்ணாடிக் கடியில்
எண்ணெய்த் துளிகள் போன்று
மினுங்கும் கண்களுடன்
வந்தவள் கேட்கிறாள் ..
''மிஸ்டர் வந்தியத் தேவன்?''
                                        - போகன் 

உலகின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்

லைட் போடோக்ராப்ஸ்
கப் ஆப காபி

கரிகாலன் பாஸ்ட் லுக்