Wednesday, January 23, 2013

கமலுக்கு பெருகும் ஆதரவு!

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தமிழக அரசு அந்தப் படத்தையே தடை செய்துள்ளது. இது கமலுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமலுக்கு ஆதரவான சூழல் திரும்பியுள்ளது. திரையுலகினர் இந்தத் தடை குறித்து வெளிப்படையாக வாய் திறக்காத சூழலில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகுகிறது. கமலை ஆதரிக்கக் கோரி பலரும் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஐ சப்போர்ட் கமல் எனும் வாசகங்களுடன் சமூகத் தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 டிடிஎச், திரையரங்க உரிமையாளர்கள் விவகாரத்தின்போது அமைதி காத்த சினிமாக்காரர்கள், இப்போது கமலுக்கு ஆதரவான நிலையை வெளிப்படையாக எடுக்க வேண்டியது அவசியம் என பேச ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் - கம் - இயக்குநர், "நிச்சயம் கமல் பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படைப்பாளிக்கு இதற்கு மேல் சிக்கல் இருக்க முடியாது. அதே நேரம் முஸ்லிம் சமூகத்தை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு திரையுலகினர் கமலுக்கு ஆதரவு தெரிவிக்காமலிருக்கக் காரணம் இதுதான். ஆனால் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் இதுபோன்ற தடைகளை திரையுலகினர் இப்போது எதிர்க்காவிட்டால், சினிமாவில் புதிய முயற்சி என்பதே அருகிவிடும்," என்றார் (தன் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன்)

இரட்டைவேடத்தில் விரைவில் அஜீத்....







விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயர் வைக்கப்படாத படத்தின் இறுதிக் கட்ட படப் பிடிப்பில் பிசியாக இருக்கிறார், அஜீத். இதற்கு பின், இயக்குனர் சிவா இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க, சம்மதித்துள்ள அஜீத்,  முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.2001ல், முருகதாஸ் இயக்கத்தில், அஜீத் நடித்த, "தீனா படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதற்குபின், இந்த கூட்டணி, மீண்டும் இணையவில்லை. தற்போது, அதற்கான காலம் கனிந்துள்ளதாக கூறும், கோலிவுட் வட்டாரங்கள், இந்த படத்தில், அஜீத்துக்கு இரட்டை வேடம் என்றும், கூறுகின்றன. ஏற்கனவே, அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த, "வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்கள், மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதால், அந்த சென்டிமென்ட் காரணமாக, இந்த படத்திலும், அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.