Friday, August 19, 2011

கூடு

நெஞ்சு வெந்துவிட்டதா
என்று அவன்
குத்திப் பார்க்கையில்
நான் அவன் அருகில்தான்
அமர்ந்திருந்தேன்..
அவன் குடிக்கிற
காட்டமான பீடி
ஒன்றைப் புகைத்துப் பார்க்க
மிக விரும்பினேன்
எனக்கு புகைக்கும் பழக்கம்
அதுவரை இல்லை எனினும்...
எரிதழல் தாங்காது
நானில்லாத என்கூடு
தானே எழுந்து அமர்வதை
ஆச்சர்யமாய்ப் பார்த்தேன்
கடைசிநேரத்திலும் பேரம் பேசிய
என் மகனைத் திட்டிக் கொண்டே
அவன் அதை அடித்து
அமர்த்திக் கொண்டிருந்தான்

மகனைச் சொல்லிக் குற்றமில்லை
கருமச் செலவுகளில் யாரும்
பங்கு கொள்ள வராதது பற்றி
அவன் ஏற்கனவே வருத்தத்தில் இருந்தான்
என்னுடைய காப்பீடுதாள்கள் எதுவும்
சகோதரிகள் கையில் சிக்கும் முன்பு 
அவன் சென்றாகவேண்டும்
வாரிசுச் சான்றிதழ்கள் வங்கிக் கணக்குகள் என்று
முக்கியமான கவலைகள் இருக்கின்றன..
அம்மா யாருடன் இருப்பாள்
என்று வேறு தீர்மானிக்க வேண்டும்
அவள் பேரில் தான் வீடு இருக்கிறது..
நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன்
கடைசியாக அவளைப் பார்க்கையில்
அவள் என் கடன் அட்டையைத்
தேடிக் கொன்டிருந்தாள் 
நேற்று நெஞ்சில் ஆடிய பேரன்
என்னைக் கண்டு பயப்பட ஆரம்பித்திருந்தான்
அழுதுகொண்டிருந்த மகள்கள்
மாப்பிள்ளைகள் வந்ததும்
எழுந்து தனியறைக்குள் சென்று கிசுகிசுத்தனர்

இனி அங்கு நான்
திரும்ப முடியாது என உணர்ந்தேன்
முதல் முறையாக செய்வதற்கு
ஒன்றுமில்லாது
தெரியாது
அந்த அந்தியில் 
சடசடத்து எரியும்
தங்கத் தீச்சுடர்கள் நடுவே
கருகும் என் அடையாளத்தை
வெறித்தவாறே
அவன் அருகே அமர்ந்திருந்தேன்
என் கூடு மீண்டும் ஒருமுறை எழுந்தது
அவன் மீண்டும் ஒரு முறை
கம்பியால் ஓங்கி அடித்தான்
நான் 'மெல்ல''என்றது
அவனுக்குக் கேட்கவில்லை...
                                      - போகன்  

No comments:

Post a Comment