Sunday, July 24, 2011

செல்வாவின் வித்தியாசமான சிந்தனை!

செல்வா ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். செல்வாவின் திறமை கண்டு வியந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வாவிடம் ஒரு பொருளை விளம்பரப்படுத்த வித்தியாசமாக முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

செல்வாவும் அந்தப் பொருளினைப் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொண்டு தனது அறைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்பொழுது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் சிறு பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய கடைக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் துணைக்கு வரும்படியும் செல்வாவை அழைத்தார்.

" என்ன பிரச்சினை ? " என்றார் செல்வா.

" யாராச்சும் SMS அனுப்பினா அரை மணிநேரம் கழிச்சுதான் எனக்கு வருது , அதான் என்னனு பாக்கணும்" என்றார் நண்பர்.

" இதுக்கு ஏன் கடைல கொடுக்குறீங்க ? , உங்களுக்கு SMS அனுப்புறவர்கிட்ட அரை மணிநேரம் முன்னாடியே அனுப்ப சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சதுல! " என்றார்.

இதற்குப் பிறகு அந்த நண்பர் எதுவும் சொல்லமால் செல்வாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வா அந்த விளம்பரத்திற்குத் தேவையான ஒரு வித்தியாசமான கற்பனையை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு மேலாளரிடம் சென்றார்.

செல்வாவின் கற்பனையைப் படித்துப்பார்த்த அவரது மேலாளர் தனது வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அப்படி என்னதான் செல்வா வித்தியாசமாக எழுதித் தொலைத்தார் ? செல்வா எழுதிய வித்தியாசமான கற்பனை இதோ!


******   போன் விளம்பரம்!   
****** 

*.எங்கள் போன் விலை மற்ற போன் விலைகளைக் காட்டிலும் மிகக் குறைவு , மற்ற போன்களின் விலை 4000 என்றால் எங்கள் போன்களின் விலை வெறும் 6000 மட்டுமே!

*.எங்கள் போன்கள் மிகமிக வலிமையானவை. எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும் உடனே உடைந்து போகக்கூடியவை!


*.மிகச்சிறந்த பேட்டரி வாழ்நாளை உடையவை. ஒருநாளைக்கு 24 மணிநேரம் சார்ஜ் செய்தாலே 10 நிமிடம் வரை பேட்டரி சார்ஜ் நிக்கக்கூடியது!

ரயில்வேயும் செல்வாவும்!

இது செல்வா ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.

செல்வா ரயில்வே அதிகாரியாகப் பொறுப்பேற்று ஒரு நிலையத்தின் நிலைய அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்.

புதிய சிந்தனையுடைய நமது செல்வா அநேக மாறுதல்களைக் கொண்டுவந்தார். சில நாட்களிலேயே மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும் உயரதிகாரிகளும் செல்வாவைப் பாராட்டத் தொடங்கினர்.

ஆனால் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் "EMERGENCY EXIT " என்று எழுதப்பட்ட இடத்தில் ஒரு மாறுதல் கொண்டுவரும் வரையே நீடித்தது.

ஒருநாள் "EMERGENCY EXIT" என்ற இடத்தில் கம்பிகள் பொருத்தப்பட்ட ஜன்னலைக் கொண்டு அடைத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த உயரதிகாரி ஒருவர் எதற்காக இதனை அடைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

" சார் , எமர்ஜென்சி எக்சிட் அப்படிங்கிறது எதாச்சும் பிரச்சினைனா தானே வேணும் , எல்லா நேரத்திலும் எதுக்கு இருக்கணும் ? அதான் அடைக்கிறேன்! எப்பவாச்சும் எதாச்சும் பிரச்சினைனா நாம அந்த நேரத்துல இந்த ஜன்னல எடுத்திட்டு பழையபடி ஓட்டையா மாத்திடலாம்ல! " என்று தனது திட்டத்தைச் சொன்னார் செல்வா.

சற்றே அதிர்ச்சியாக செல்வாவைப் பார்த்த அந்த அதிகாரி செல்வா போன்ற அறிவாளிகளை வெறும் ரயில்வே துறையில் வைத்து அவரது அறிவினை வீணாக்க விரும்பாமல் உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கினார்.

தமிழ் தெரியாதுனா சொல்லவேண்டியதுதானே!

ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் சுற்றுலா செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தனர்.

சுற்றுலா செல்லலாம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்த நாளில் செல்வாவின் நண்பர் செல்வாவின் வருகைக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

நீண்ட நேரம் கழித்து வந்த செல்வாவிடம் " ஏன்டா இவ்ளோ நேரம் ? ஒரு மனுஷன் எவ்ளோ நேரம்தான் வெயிட் பண்ணுறது ? "

" எங்க வீட்டுல இருந்து இங்க வரதுக்கு ஒரே ஒரு பஸ் தான் இருக்கு , அதுவும் போயிருச்சு! அதான் நடந்தே வரேன்! அதனால லேட் ஆகிருச்சு " என்றார் செல்வா.

" எரும , வர்ற வழில டூ வீலர்ல வர்ற யாரச்சும்கிட்ட லிப்ட் கேட்டு வரலாம்ல! "

" லிப்டுனா பெரிய கட்டடத்துல கீழ இருந்து மேல போறதுக்கு வச்சிருப்பாங்களே அதுதானே ? டூ வீலர்ல எப்படி அவ்ளோ பெரிய லிப்ட்ட எடுத்துட்டு வர முடியும்?" என்று தனது அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினார்.

இதற்குமேல் பேசினால் வீண் விவாதங்கள் வரலாம் என்று மேற்கொண்டு பேசாமல் தாங்கள் ஏற்கெனவே பேசிவைத்திருந்த சுற்றுலாத் தளத்திற்கு விரைந்தனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் செல்வாவின் நண்பர் செல்வாவை தனியாக விட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த அவரது நண்பர் செல்வாவும் வேறொருவரும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

" டேய் , ஏண்டா அவர் கூட சண்டை போடுற ? " 

" அவன் என்ன சொன்னான்னு நீயே கேளு ! "

அருகில் இருந்த நபரிடம் " என்ன பிரச்சினைங்க ?" என்றார் செல்வாவின் நண்பர்.

இவர் என்ன கேட்டார் என்று புரியாத அந்த நபர் " I DON'T KNOW TAMIL " என்றார்.

செல்வாவிடம் திரும்பிய அவரது நண்பர் " டேய் லூசு , அவருக்கு தமிழ் தெரியாதாம்ல , அப்புறம் எதுக்கு அவர் கூட சண்டை போட்டுட்டு இருக்க ?"

" தமிழ் தெரியலைனா தமிழ் தெரியாதுன்னு சொல்லவேண்டியதுதானே ?! " என்று கோபமாகக் கேட்டார் செல்வா.

" தமிழ் தெரியாதுன்னு தான சொல்லுறாரு ? "

" தமிழ் தெரியாதுன்னு தமிழ்ல சொல்லவேண்டியதுதானே !? அப்பத்தான எனக்கு புரியும்! " என்ற செல்வாவைப்பார்த்து தலையில் அடித்துக்கொண்டு " வா போலாம்! " என்று அழைத்துச்சென்றார்.

Saturday, July 23, 2011

இனி பெட்ரோலே தேவையில்லை!

தனது நீண்ட ஆராய்ச்சியின் பயனாக செல்வா பெட்ரோல் இல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் வண்டியைக் கண்டுபிடித்தேவிட்டார்.

இதுவரை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் செல்வாவின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருந்தன. பெட்ரோல் இல்லாமல் ஓடுகின்ற வண்டியைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரண விசயமல்லவே!

உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சியாளர்கள் செல்வாவின் பெட்ரோல் இல்லாமல் ஓடும் வாகனத்தைப் பார்க்க ஆவலுடன் வந்துகொண்டிருந்தனர்.

செல்வா தனது வாகனத்தினைப் பார்வைக்கு வைத்திருந்தார். அது இயங்குவதற்கு பெட்ரோல் எதுவும் தேவைப்படாது என்றும் மின்சாரம் மட்டுமே போதுமானது என்றும் விளக்கிகொண்டிருந்தார்.

ஊர்ப்பொது மக்களும் ஆராய்ச்சியாளர்களும் செல்வாவின் வாகனத்தை அதிசயமாகப் பார்த்துகொண்டிருந்தனர்.

அப்பொழுது இது எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியாளர் செல்வாவிடம் கேட்டார்.

" இது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது , இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் அனைத்து வாகனங்களும் சிறிது நேரத்திற்கே மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடியது. ஆனா என்னோட இந்த வாகனம் நீண்ட நேரத்திற்கு இயங்கும். அதனால எங்க போறதுனாலும் நீங்க இத நம்பி போலாம்! " என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகச் சொன்னார் செல்வா.

" அதுக்கு எவ்ளோ நேரம் சார்ஜ் போடணும் ? " என்றார் மற்றொருவர்.

" சார்ஜ் போட வேண்டியதில்லை , நம்ம வண்டிக்குப் பக்கத்துல இன்னொரு வண்டி இருக்கு பாருங்க அதுல ஒரு ஜெனரேட்டர் இருக்கும் அதுல இருந்துதான் இதுக்கான கரண்ட் வருது! "

" அப்ப அதுக்கு பெட்ரோல் ஊத்தனும்ல ?"

" கண்டிப்பா அதுக்கு ஊத்தித்தான் ஆகணும்! "

" அப்புறம் இது என்ன பெரிய கண்டுபிடிப்பு, நமக்கு அதிகமா செலவுதானே ஆகுது ?" என்று குழப்பமாகக் கேட்டார் அந்த நபர்.

" இந்த வண்டிய மட்டும் நீங்க வச்சிட்டு , அந்த வண்டிய வேற ஒருத்தருக்கு வித்திடுங்க , இப்ப நீங்க அதுக்கு பெட்ரோல் ஊத்த வேண்டாம்ல! " என்று தனது அறிவாளித்தனத்தை நிலைநாட்டினார் செல்வா.

நன்றி:- http://selvakathaikal.blogspot.com/

வாழ்க்கை என்பது...




இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.

எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?', என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.

ஜிங்ஜு `எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்', என்றான்.

அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் மாஸ்டரிடம் உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன்.
அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்'' என்று மாஸ்டர் சொன்னார் என்றான் ஜிங்ஜு.

நீதி : சாதாரண மனிதனாகவே இரு. அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.

வாழ்க்கை ரகசியம்.

வாழ்க்கையில் பொறுமையும், பெருந்தன்மையும் மிக மிக அவசியம் உலகத்து மதங்களின் ‌மேலான கருத்து அதுவே ஆகும்... உலகில் யார் அதிகமாக பேசுகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் அறைகுறைகளாகத்தான் இருப்பார்கள் தெரியாத விஷயங்களை கூட தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டு இந்த உலகில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அறிஞன் கூறினான் “நோட்டுகள் என்னவோ அமைதியாய் இருக்கும், சில்லறைகளே சத்தம் போடும்”... என்று

வாழ்க்கையில் தத்துவம் அமைதிகாப்பதிலேதான் இருக்கிறது... தெரிந்த விஷயங்களை கூட ஆணவம் கொள்ளமல் அமைதிகாப்பது உலகின் வெற்றிக்கான வழிகளில் ஒன்று...

அது குறித்த ஒரு ஜென் தத்துவம் :

ஒரு ஜென் துறவி இருந்தார் மல்யுத்தத்தில் கை தேர்ந்தவர்.

அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர். யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார். தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது.

இந்தக் கோபக்காரருக்கு நம்முடைய ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை. ‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லாரும் அவர் கால்ல போய் விழறீங்களே!’ என்று ஆதங்கப்பட்டார்.

அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

இதைப் பார்த்துக் கடுப்பான கோபக்காரர் துறவி வீட்டு வாசலில் போய் நின்றார். ‘நீ தைரியமான ஆளா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடு!’ என்று தொடை தட்டினார்.

துறவி மெல்லப் புன்னகை செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது. ‘குருஜி, நீங்கதான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்க!’ என்று அவரைத் தூண்டினார்கள்.

அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்குக் கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.

இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’
“பொருத்தாரே பூமி ஆள்வார்” என்று உரைக்கிறது நம் செம்மொழி

ஆகையால் நம் நீண்ட வாழ்க்கை சில ஆண்டுகளுக்குள் வாழ்ந்து முடித்து விடுவதல்ல... இதை ஆயுளுக்கும் தொடர நாம் படிப்பினைகளை ஆய்ந்தாக வேண்டும்... அனைத்தும் அறிந்துக் கொண்டு ‌அமைதி கொள்வோம் அப்போதுதான் மலைப்போல் எழுவோம்.. இதுவே வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம்..

கண்ணதாசன் பாடல் வரிகள்-8

பாடல்: மூடித்திறந்த இமையிரண்டும்
பாடியவர்கள்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: தாயைக் காத்த தனயன்



மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த காலிரண்டும் நில்நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல்சொல் என்றது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
வா வா என்றது
அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல் காதல் என்றது
கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல் காதல் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
வா வா என்றது
காட்டுக் குயிலைக் கூட்டிலடைத்துப் பாட்டுப் பாடச் சொன்னது
கூட்டுக்குயிலை நாட்டுக்குயிலாய்க் கூட்டிப்போக வந்தது
காட்டுக் குயிலைக் கூட்டிலடைத்துப் பாட்டுப் பாடச் சொன்னது அது
கூட்டுக்குயிலை நாட்டுக்குயிலாய்க் கூட்டிப்போக வந்தது
வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நின்றது
வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நின்றது
வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளிக் கலைமான் விழுந்தது
வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளிக் கலைமான் விழுந்தது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த காலிரண்டும் நில்நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல்சொல் என்றது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
வா வா என்றது