Tuesday, February 21, 2012

அந்தமான் தீவு ஜாறாவா பழங்குடி மக்கள்
ஜாறாவா என்னும் இந்தி சொல்லுக்குப் பொருள் ‘அந்நியர்கள்’ என்றுபொருள். இந்தியப் பெருநாட்டின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் மூன்றரை இலட்சம் மக்கள் வாழும் தீவுகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகள். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுநகரங்களில் வாழ்கிறார்கள். இரு பங்கினர் கடலோரங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடியேறியவர்களே. அந்தத்தீவின் ஆதிக்குடிகள் நூற்றுக்கணக்கில்தான் இன்றும் வாழ்கின்றன. இந்தத் தீவில் சுமார் 250 -300 பேர் ஜாறாவா மக்கள் இவர்களை இந்திய அரசு திட்டமிட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான நவீனக் காட்சி சாலையாகக் கட்டமைத்துள்ளது. இந்தத் தீவிற்கு செல்லும் மக்கள் இவர்களைப் பார்ப்பது பற்றியே பேசிக்கொள்கிறார்கள். இந்தத் தீவில் இருக்கும் மிக அழகான கடற்கரைகள் (பீச்) பற்றியோ, அரிய காடுகளில் வாழும் பறவைகள் பற்றியோ பேசுவதில்லை. மிருகங்களைப்போல் வாழும் ஜாறாவா மக்களைப் பார்ப்பதில், அந்த நிலையைக் கடந்த மனிதர்களுக்கு ஆசை. மனிதனை மனிதன் மிருகமாகக் காணும் இந்தக் காட்சியின் பின்னுள்ள மனநிலையை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.

- காடுகளில் ஆதிக்குடிகளாக வாழ்ந்தவர்கள் இப்போது அந்தமான் நெடுஞ்சாலை (சுமார் 50கி.மீ.) யில் பிச்சை எடுப்பது ஏன்?

- ஆதிக் குடிகள் பிறமக்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளை அரசாங்கம் எப்படிப் பேணுவது?

- ஆதிக் குடிகளின் அடிப்படை உரிமைகளைப்பேணுவது எப்படி?

இவ்வகையான கேள்விகள், அந்தமான் தெற்குத்தீவுப் பகுதிகளில் வாழும் ஜாறாவா மக்களைக் காணும் கணங்களில், பெரும் சுமையாக நம் மனதில் கனக்கிறது. மனித உரிமை, மனிதாபிமானம் என்றெல்லாம் வாய்கிழியப் பீற்றிக் கொள்கிறோம். ஆனால் ஜாறாவா மக்களைக் காட்சிப் பொருளாக்கி, சுற்றுலா நடத்தும் அரச அதிகாரத்தின் கோர முகத்தைப் அம்பலப்படுத்துவதில் நாம் என்ன செய்கிறோம்?.

உலகில் வாழும் நூற்றுக்கணக்கான ஆதிக்குடிகளில் ஒன்று ஜாறாவா இனம். இவர்கள் வாழ்ந்த இடங்கள் தனித்திருந்தன. தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஐரோப்பியர்கள், இவ்வகையான தீவுகளையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். அந்தமான் தீவில் விடுதலைப்போர் கைதிகளை அடைக்கும் செல்லுலார் சிறைகளைக் கட்டி, நூற்றுக்கணக்கில் போராளிகளை அடைத்தனர். இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி நடைமுறைப்படுத்தினர். இவ்வகையான செயல்பாடுகள், இந்தத் தீவுகளில் வெளிமனிதர்கள் அதிக அளவில் குடியேற வழிகண்டது. இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின்கீழ் இத்தீவுகள் வந்தபின், கப்பல் போக்குவரத்து குறிப்பாகக் கடற்படைக் கப்பல்களைப் பராமரிக்கும் தீவுகளாக இன்று மாற்றப்பட்டுள்ளன.

போர்ட்பிளேர் முழுவதும் கடற்படையினர் விட்டுவிட்ட எஞ்சிய பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள். இவ்வகையில் இந்திய அரசு 1978-இல் தெற்கு அந்தமான் பகுதியை வடக்கு அந்தமான் பகுதியோடு இணைக்கும் தரைவழி நெடுஞ்சாலை ஒன்றைப் போடத்தொடங்கியன. ஜாறாவா மக்கள் வாழும் காட்டுப்பகுதியில் போடப்பட்ட இச்சாலை அந்தமான் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகின்றது. 1988இல் இச்சாலை சுமார் 50 கி.மீ. நீளமுள்ள மலைக்காட்டுப் பகுதியில் போட்டு முடிக்கப்பட்டது. இச்சாலை உருவாக்கத்தின்போது ஜாறாவா மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சாலைப் பணியாளர்களும் சிலர் ஜாறாவா மக்களால் கொலை செய்யப்பட்டனர். இத்தகவல்கள் எல்லாம் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இந்தச் சாலை போடப்பட்டுப்பத்து ஆண்டுகள் (1998) வரை, பிற மனிதர்களோடு தொடர்புகொள்வதை ஜாறாவா மக்கள் விரும்பவில்லை. காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். 1998 முதல் படிப்படியாக நெடுஞ்சாலைகளுக்கு வரத் தொடங்கினர். சாலையில் செல்வோர் தூக்கி எறியும் பொருட்களை எடுக்கத் தொடங்கினர். தங்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலைப் படிப்படியாக இழக்கத் தொடங்கி, சாலையில் கையேந்தி நிற்கும் மக்களாக மாறியுள்ளனர்.

“நெடுஞ்சாலையில் வாகனங்களை மிகவேகமாக ஓட்ட வேண்டும், ஆதிக்குடிகளுக்கு இலவசங்கள் எதுவும் கொடுக்கக்கூடாது” என்றெல்லாம் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துள்ளனர். ‘புகைப்படம் எடுக்கக் கூடாது’ என்றும் எழுதியுள்ளனர். ஆனால், எதார்த்தத்தில் இவை எதுவும் நடைமுறையில் இல்லை. அந்த மக்களே வாகனங்களை நிறுத்திக் கையேந்துகிறார்கள். பெரும்பான்மையாக நிர்வாணமாக வாழும் அம்மக்களை, தங்களது புகைப்படக் கருவிகளில் ‘நாகரிக’ மனிதர்கள் காட்சிப்பொருளாகப் பதிவு செய்கிறார்கள். இவர்களை இவ்விதம் பிச்சைக்காரர்களாக மாற்றியது அவர்கள் வாழுமிடத்தில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைதான். நீர்வழிப் பாதைகளைத் தவிர்த்து, தரைவழிப் பாதையை உருவாக்கியதன் மூலம், ஆதிக்குடிகள் வாழுமிடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணியை இந்திய அரசு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில், வெளிமனிதர்களிடம் ஆதிக்குடிகள் தொடர்பு கொண்டதால் அவர்களது பாரம்பரிய வாழ்முறையை இழந்தனர். இதன்மூலம் அவர்கள் பெற்றிருப்பது பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை. ஆதிக்குடிகள், வெளிமனிதர்களிடம் தொடர்புகொள்வது என்பது இவ்வகையில்தான் அமைய வேண்டுமா? அம்மக்களை வன்முறையாளர்களாக நம் மனதில் கட்டமைத்துள்ளார். நாகரிக வளர்ச்சி பெறாத அம்மக்களை வன்முறையாளர்களாக, பிச்சை எடுத்து வாழ்பவர்களாக, மாற்றியதில் இந்திய அரசாங்கத்தின் பங்கு முதன்மையானது. இதனை எதிர்த்து, அரசு சாரா (என்.ஜி.ஓ) அமைப்புகள் சில பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களில் போட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் கடமை நமக்குண்டு.

வழக்குளின் விளைவாக ‘ஆதிக்குடிகளைப் பாதுகாக்கும் படை’ ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. இக்காவல்துறைதான் அம்மக்களை, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்முறை போன்ற செயல்களைச் செய்து வருவதில் முன்னிடம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜாறாவா இளைஞர்களை அழைத்துக் கொண்டு, இந்தக் காவல்படை ஆங்காங்குச் செல்வதைக் காணமுடிகிறது. சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டுவதற்காக, காடுகளில் வாழும் மக்களை இவர்கள் சாலைக்கு அழைத்து வருகிறார்களோ என்றும் கருதவேண்டியுள்ளது. ஆக, அரசு அம்மக்களைச் சுயமரியாதையோடு வாழ்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை; மாறாக, சுற்றுலா மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க மறைமுகமாக உதவுகிறது. அந்தமானில் உள்ள சுற்றுலா வணிகத் தரகர்கள், இம்மக்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள். ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ மிகக்குறைவாக உள்ள அம்மக்களுக்குப் பல்வேறு நோய்களையும் வெளிமனிதர்கள் கொடுக்கிறார்கள். ‘பான் பராக்’ போன்ற போதைப் பொருட்களையும் சாலையில் எறிகிறார்கள். அதனை அந்த மக்கள் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இவ்வகையில் அப்பாவிப் பழங்குடிகளைக் கொடுமைப்படுத்தும் இச்செயலுக்கு முடிவுதான் என்ன?

ஆதிக்குடிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்களது வாழ்விடங்களைப் பறிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அம்மக்களை, இப்பொழுது வாழும் ‘நெடுஞ்சாலைப் பிச்சைகாரர்கள்’ எனும் நிலையை மாற்றி, அவர்களது பாரம்பரிய வேட்டை வாழ்விற்கான வழிகளை உருவாக்கித் தர வேண்டும். அந்த மக்கள் வெளிமனிதர்களோடு தொடர்புகொள்ள விரும்பும் சூழல் ஏற்படும் தருணத்தில், அதற்கான வழிகளைச் செய்துதர வேண்டும். சாதாரண குடிமைச் சமூக மனிதர்களாக அவர்கள் வாழ்வதற்கான திட்டங்களை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கைச் சூழலைக் காக்கும் மனிதாயப்பணி நம்முன் உள்ளது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கொடுமையை விட கோரமானது; மனிதனை மனிதன் மிருகமாக வாழ நிர்பந்திப்பது.

No comments:

Post a Comment