Tuesday, February 21, 2012

அந்தமானில் தமிழர்


பர்மாவில் உள்ள அராகன் மலையில் இருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவுவரை நீண்ட நெடிய மலைத்தொடரின் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகும். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள் இன்றும் உள்ளன. இந்தியாவின் தென்கோடி முனை குமரியல்ல; இந்தியாவிற்குத் தூரக் கிழக்கில், நிக்கோபார்த் தீவுக்கும் தெற்கே உள்ளது. இப்பகுதி நிலநடுக்கோட்டிற்கு வடக்கே உள்ளது. இதன் பெயர் பிக்மலியன் பாயின்ட் இது அண்மையில் 'இந்திரா முனை' என நடுவணரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர், சென்னையிலிருந்து 1191 கடல் மைல் தூரத்திலும், கல்கத்தாவிலிருந்து 1255 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றது. 1945 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அந்தமான் முதலிய தீவுகள் 1-11-1956 முதல் நடுவணரசின் நேரடி மாநிலமாயின.

தமிழர் குடியேறிய வரலாறு

தீவுமக்களும் தமிழரும் :

அந்தமான் தீவில் ஆப்ரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். இம்மக்கள் 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர், பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் பொருள், மொழியின் வேர்ச்சொல் ஆகியவை தமிழோடு ஒத்துப் போகின்றன. இவர்களைப் போலவே நிகோபார் தீவுகளில் மங்கோலியன் கலப்பு இன மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிகோபாரிகள் வாழ்கின்றனர். நிகோபாரி மொழியில் தமிழைப் போல் 'ழ' கரம் பயன்படுத்தப்படுவதோடு, குடுமி வளர்த்தல் மற்றும் மங்கோலியரோடு ஒத்துப் போகாத தமிழரோடு இணைந்த குடும்ப வாழ்க்கையும், பழக்க வழக்கங்களும் உண்டு.

பெரிய நிகோபாரில் உள்ள 'சாம்பன்' பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதியுள்ளார். "இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழனைச் சந்தித்தால் 'சாம்பன்' பழங்குடியினரில் இருந்து என்னால் வேறு படுத்திக் காண முடியாது"என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந்தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

'அந்தமான்' என்ற பெயரே தமிழர் கொடுத்ததுதான். மான்கள் நிறைந்திருந்த காரணத்தால் இப்பெயரால் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இருந்ததாம். இதற்கான ஆதாரத்தை தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இன்றும் காணலாம். நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்தபெயர் : 'நக்கவரம்' என்பது. அக்காலத்தில் அத்தீவில் இருந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.

கார் நிகோபாரை 'கார்தீவிபா' என்றும் கிரேட் நிகோபாரை 'நாகதீவிபா' என்றும் சோழர்கால சமஸ்கிருத கல்வெட்டு கூறுகிறது. மார்கோபோலோ வரவால் இத்தீவின் பெயர் 'நெக்குவரம்' என்று மாறிவிட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யில் வரும் சாதுவன் என்ற வணிகன் இத்தீவில் தான் மாட்டிக்கொண்டான் என்கின்றனர். 'நக்க சாரணர் நாகர்வாழ்மலை' என்று குறிப்பிடும் பகுதி இஃதே எனச் சொல்லலாம்.

இரண்டாம் கட்ட குடியேற்றம் :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தீவின் முக்கியத்துவத்தை உணர்ந்து படைகளை நிறுத்தி இருந்தனர். பின்னர் அரசியல் கைதிகளை வாழ்நாள் தண்டணை தந்து இங்கு குடியேற்றினர்.
சிறைச்சாலைக் கட்ட சென்னையிலிருந்து பல தமிழர் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர்.

அரசியல் கைதிக்கு அடுத்து, வணிகர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தின்
போது போராடிய 1400 மலையாளிகளும் பெருமளவில் குடியேறியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1971-ஆம் ஆண்டு மொழிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம், தமிழர் இரண்டாம் இடம். இன்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

567 தீவுக் கூட்டத்தில் இதுவரை மக்கள் குடியேறியிருப்பவை 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகளே ஆகும். 1943-இல் ஜப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 1945 வரை மூன்றாண்டுகள் வைத்திருந்தனர். பின்னர் இத்தீவை நேதாஜி சுபாஷ் சந்திர போசிடம் விட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கேதான் ஏற்றப்பட்டது. முதல் ஆளுனராக நேதாஜியால் நியமிக்கப்பட்டவர் டாக்டர். கர்னல் லோகநாதன் என்ற தமிழர் ஆவார்.

தமிழரின் இன்றைய நிலை

சமயம் :

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் செல்வாக்கே எங்கும் இருந்தது. அவர்களின் தலைமையிடமாக 'ராஸ்' என்ற சின்னஞ் சிறியத் தீவு விளங்கியது. இங்குதான் கிருஸ்த்துவ தேவாலயம் இருந்தது. அது தவிர்த்து அனுமதிக்கப்பட்ட ஒரே கோவில் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்தான்!

தலைநகர் போர்ட் பிளையரின் வெற்றிமலை முருகன் கோயிலை இங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள். இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயிலாகும். தீவெங்கும் முருகன், வினாயகர், மாரியம்மன் ஆலயங்களைக் கட்டி, அவை தொடர்பான விழாக்களை நடத்தி, தமிழர் பண்பாட்டினைக் காப்பாற்றுகின்றனர். காதணிவிழா, திருமணம் போன்றவை இக்கோயில்களில் நடப்பதுண்டு. இங்கு விழாக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடத்தப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் முதலியவை முக்கிய விழாக்களாகும்.

உணவு :

வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் சந்தைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் மரபான இட்லி, தோசை, வடைக்கும் மக்களிடம் பேராதரவு உண்டு.

உடை :

பேண்ட்-சட்டைகளையே எல்லோரும் அணிகின்றனர். இதுவே தேசிய உடையாகக் காணப்படுகிறது. பெண்கள் சேலை, ஜாக்கெட், பாவாடைகள் அணிகின்றனர்.

பிறபழக்கவழக்கங்கள் :

பெண்கள் தலையில் பூச்சூடுவதும், நெற்றியில் திருநீறும், குங்குமமும் இடுவதிலிருந்தும் தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணிதெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டுவிட்டனர்.

ஊர் பெயர் :

தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப்பெயரிட்டுள்ளனர்.

தகவல்தொடர்பு சாதனங்கள் :

'அந்தமான் முரசு' என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் சுப. சுப்பிரமணியன் ஆவார். இன்று வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன. இவற்றுள் சில கட்சி இதழ்கள் என்றாலும் பிறமொழிகளில் இந்தளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை. அதே நேரத்தில் தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள்.
அந்தமானிலுள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கொருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாள் விமானத்தின் மூலமும் வருகின்றன. தமிழகத்திலிருந்து வெளிவரும்
இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

திரைப்படங்கள் :

தமிழகத்திலிருந்து வரும் திரைப்படங்கள் தீவில் உள்ள 4 திரை அரங்குகளிலும் திரையிடப்படுகின்றன. இங்கு ரசிகர் மன்றங்களும் உண்டு.

தமிழ் மொழியின் நிலை

அந்தமானில் - வங்காளியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழிபேசும் மக்கள் இருந்தாலும் 'இந்தி'யே ஆட்சிமொழியாக இருக்கிறது. அந்தமான் தமிழர்பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.

கல்வி :

தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் 'தமிழ்க்கல்வி' தருவதில் மத்திய அரசு தயக்கமே காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி கொடுக்காமல் இந்திபேசும் இந்தியர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதே அப்போதைய நிலை.
தமிழ்க் கல்விப் பிரச்சினைப் பற்றி அந்தமான் தலைமைக் கமிஷனராக அப்போதிருந்த ஹர்மந்தர்சிங் சொல்கிறார் :
"இந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன. வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள்.

பிறகு அதுவும் போதனா மொழியாக்கப்பட்டது. இப்போது தமிழ்மொழி மீடியம் வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓர் இருவழிப்பிரச்சினை. இந்தப் பிரச்சினையைக் கிளப்புவோர் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திமொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டவர்கள். இந்திப்படிப்பவர்கள். மெயின்லாண்டுக்குப் போக வர இருப்பவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்" என்று மொழிந்திருப்பதிலிருந்து அன்றையப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.

அந்தமான்-நிக்கோபார் கல்வித் துறையின் மதிப்பீட்டின்படி ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் மும்மொழித் திட்ட ரீதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி
பயின்று வருகிறார்கள். இங்கே மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை முடித்த பலர் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக்கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ அந்தமானில் இல்லை.

அமைப்புக்கள் :

1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்

அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல ரெங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இனரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் பணியாற்றுகின்றன.

தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி-பாரதிதாசன் விழா, தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ்விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை அது நடத்தி வழிகாட்டியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்žவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டு தீவு மக்களுக்கு இலக்கியச் சமய விருந்தளித்திருக்கிறார்கள்.

தமிழர் சாதனைகள்

இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இது தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார் 1920-இல் மிடில் அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கந்தசாமி 'லாங் ஜலண்டில்' அண்ணாவுக்குச் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். கே.ஆர். கணேஷ் அந்தமான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். க. கந்தசாமி இன்று மக்கள் கட்சி தலைவராகவும், பிரதேசக்கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் இருக்கிறார்.

"தீவின் 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர் மூவர். ஒருவர் நியமன உறுப்பினர். இதுபோல முப்பதுபேர் கொண்ட பரிந்துரை மன்றத்தில் ஒரே ஒரு தமிழர் மட்டுமே உறுப்பினராகவும் பரிந்துரைஞராகவும் இருக்கிறார்" என்று சுப. சுப்பிரமணியம் 94-ம் ஆண்டு நிலவரத்தை விளக்குகிறார்.

94-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தை பத்திரிக்கையாளர் முகவை முத்து விளக்குகிறார்: இப்போதைய நிலைப்படி போர்ட் பிளேயர் நகராட்சித் தலைவர் தமிழர். அமைச்சர் அந்தஸ்தில்
அதுகூட முதலமைச்சர் அந்தஸ்தில் தமிழர். மிகப்பெரிய அதிகாரிகளாக-மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட தமிழர்.

பத்திரிக்கை ஆசிரியராக - ஆளுங்கட்சிக்காரராக தமிழர். பெரிய பெரிய வணிகராக தொழிலதிபராக தமிழர். சற்றேறக் குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உண்டு. அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று பே உயிரை தியாகம் செய்தவனும் தமிழன். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் (சுதந்திர இந்தியாவில்) முத முதல் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி தமிழன்" என்கிறார்.

வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :

தீவில் முன்பு குடியேறியவர்கள் அரசு ஊழியம் தேடிக் கொண்டவர்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 1970க்கு முன் தீவின் முக்கிய பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். இருந்தபோதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டு வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.

தமிழர்படும் இன்னல்கள் :

தமிழர்கள் தென் அந்தமானிலும், போர்ட் பிளையரிலும் பெருந்தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழரின் தொகையைச் சிதரடிப்பதற்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்காளிகளின் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வட இந்தியர் ஒப்புவதில்லை. 567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல, மெல்ல வங்காளியர் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.

தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப்புயல் மழையில் தமிழர்களின் குடியிறுப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. மீண்டும் தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்னபதில்:
"உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப்படுகிறது. ஆளுனரின் நிலையே இது வென்றால் மற்ற பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்?

தமிழரை இந்திக்காரன் 'ஐயாலோக்' (ஐயா என்று சொல்பவர்); 'கட்டாபானிவாலா' (ரசம் குடிப்பவன்) என்றும் 'ஹே ராவன்' என்றுதான் அழைப்பார்கள். இதுதான் வட இந்தியரின் மன நிலையாக இருக்கிறது.

இருந்த காலம்

கொஞ்ச நாட்களாக
அப்பாவுடன் அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அப்பா இறந்து
வருடங்களாயிற்று
மனைவி கவனித்து
மருத்துவரிடம் போகலாமா
என்கிறாள் கவலையுடன்

உயிரோடிருந்த போது
அப்பாவும் நானும்
ஒருவருடம் முழுக்க
ஒரே வீட்டில் இருந்து கொண்டு
பேசாமல் இருந்தோம்
இப்போது நானும்
என் மகனும்
இருப்பது போல ....

ஏதோ ஒரு
அற்ப காரணம்தான்..
ஆனால் தோழர்களே
அற்ப உயிர்களின்
காரணங்கள்
வேறெப்படி இருக்கும்?


மருத்துவரிடம் எதற்கு
நான்
என் கடனை
திருப்பிச்
செலுத்திக்
கொண்டிருக்கிறேன்
என்றேன்

அகண்டப் பெருவெளியில்
எங்கேனும் அலைந்து கொண்டிருந்தால்
அப்பாவுக்கும் இருக்கக் கூடும்
என்னிடம் சொல்ல
சில வார்த்தைகளேனும் ...
சொல்லிச் சிரிக்க
சில பழங்கதைகள்...

அவர் அப்பாவாகவும்
நான் மகனாகவும்
இருந்த
காலத்தில் நடந்த கதைகள்..
அவர் இறந்தவராகவும்
நான் இருப்பவனாகவும்
இல்லாத
அந்தக் காலத்தில்
- போகன்

பிளாஸ்டிக் புன்னகைகள்

1.அவளது
சாக்கரின் புன்னகை
மிதக்கும்
பிளாஸ்டிக் கண்களைத் தாண்டி
எப்படி
அவளை நேசிப்பது
என்பதுதான்
எனக்கு
இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை


2.எங்கிருந்தோ பறந்துவந்து
ஜன்னல் விளிம்பில்
அமர்ந்துகொண்ட
பட்டாம்பூச்சியை
குறைந்தது
பத்துப் பேராவது
கவிதை செய்திருக்கக் கூடும்
என்று நினைத்துக் கொண்டேன்
களங்கமின்மையின் பாவனைகளோடு
புகைப்படத்துக்கு
போஸ் தரும்
குழந்தை நடிகை போல
இது
ஒரு தொழில்முறைப் பட்டாம்பூச்சியாகவும் இருக்கக் கூடும் தானே?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

3.எப்படி இருக்கிறாய்
என்றவள் கேட்டதில்
இருக்கிறாயா
என்ற
கேள்வியும் இருந்ததா?

4நான் இல்லாவிட்டால்
இறந்துவிடுவேன்
என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..
இறந்தபிறகு
பிறந்ததா இது?

5.நெடுநாட்களாய்
உன் குகையில் நீ இருந்தாய்
என் குகையில் நான் இருந்தேன்
ஒரு சலிப்பான காலையில்
ஒரே நேரத்தில்
தற்செயலாய் வெளியே வந்தோம்
காலைக் கதிரின
பொன் வெயில்
இருவர் மீதும் படர்ந்தது

அந்த
இனிப்புவெளிச்சம்
மற்றவரிடமிருந்தே வருகிறது
என்று தவறுதலாக நினைத்துக் கொண்டோம்...
காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் ...

- போகன்

Saturday, September 3, 2011

மங்காத்தா : திரை விமர்சனம்


கொள்ளைக்கும்பல், பிளான் பண்ணி வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது. கும்பலில் ஒருத்தன் மற்ற உறுப்பினர்களுக்கு நாமம்போட்டு தங்ககட்டிகளுடன் எஸ்ஸாகிறான். ஏமாற்றப்பட்டவர்கள் அந்த டுபாக்கூரிடமிருந்து மீண்டும் தங்ககட்டிகளை எப்படி கைகப்பற்றுகிறார்கள் என்பதே கதை.

கிரிக்கெட் சூதாட்டத்திற்காக கொண்டு செல்லப்படும் ஐநூறு கோடி பணத்தை கடத்த முயற்சிக்கும் கும்பல், அதில் கடைசியாக வந்து சேர்ந்து கொ(ல்)ள்ளும் விநாயக்காக அஜித். அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி. அர்ஜுன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்பிரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷின் மகளான த்ரிஷாவும், அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜுன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார். 

ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகிறான். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும், த்ரிஷா மூலம் ஜெயப்பிரகாஷை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்பிரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது. திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜுன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்பிரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது... திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா... அல்லது அம்போவா என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிக்காட்சி. 

கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித், ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, அர்ஜுன் என நாலு பேருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம். அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்புதான்.. திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. 

தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.

தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார். 

வழக்கம் போல் ஜெயப்பிரகாஷ் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் அருமையாக நடித்துள்ளார். எந்த பாத்திரத்திற்கும் பொருந்த கூடிய ஒரு நடிகர் நாசர் போல். த்ரிஷா நடிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் கொஞ்சம் என்றாலும் அழகாக சொந்தக்குரலில் பேசி மனதில் அழகாய் நிலைத்திருக்கிறார். கூடவே அஞ்சலி அமைதியான முகம் ப்ளஸ் அமைதியான அழகு, ஆனால் காட்சிகளில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் தோன்றும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

மகாகவி பாரதியாரின் பேரனான நிரஞ்சன் பாரதி எழுதிய 'கண்ணாடி நீ... கண்ஜாடை நான்...' பாடலுக்கு வைபவ்-அஞ்சலி ஜோடியும், அர்ஜுன்-ஆன்ட்ரியா ஜோடியும் ஆடிப் பாடுகிறார்கள். அழகாய் கண்ணில் நிறைகிறார்கள். பார் நடத்துனரின் தோழியாக வரும் லட்சுமிராய் 'விளையாடு மங்காத்தா' பாடலுக்கு ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

படத்தினை முக்கியமாக தூக்கிநிறுத்திய விஷயம் அஜித்-அர்ஜுன் கூட்டணி. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அத்தனையும் அப்லாசுகளை அள்ளிக்கொண்டது. அதுவும் அஜித் 'வாயா ஆக்ஷன் கிங்கு' என்கிறதும் பதிலுக்கு 'வாயா தல' என்கிறதும் அப்ளாஸ். தமிழ் சினிமாவில் இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள் நடக்குறது வரவேற்கத்தக்கது.

படத்தில் பஞ்ச் சீன்கள் என்றவுடன் ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்திற்கு வருகிறது, ஆனால் இது வழக்கமான தமிழ் சினிமா பஞ்ச் டயலாக் போல் இல்லை, லைட்டாக, இயல்பாக அஜித் பேசும் "எவ்ளோ நாளுக்குதான் நான் நல்லவனாக நடிக்கிறது" என்ற டயலாக்கிற்கு அதிர்கிறது தியேட்டர்.

படத்தில் அஜித் பைக் ஓட்டும் சீனில் யாரும் சீட்டில் உட்காரவில்லை. அஜித் தண்ணியடித்துக்கொண்டு கூட்டாளிகளை கொல்வதற்கு செஸ் போர்டில் ப்ளான் பண்ணும் காட்சி வெங்கட் பிரபுவின் ஸ்பெஷல் பஞ்ச்.

படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி; டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம். 

எவ்வளவு ப்ளாப் கொடுத்தாலும், அஜித் படத்திற்கு எப்படி இவ்வளவு ஓப்பனிங் கிடைக்கிறது? அதுவும் மன்றங்களை கலைத்து அறிவிப்பு கொடுத்தவருக்கு? அரசியல் ஆசை காட்டாதவருக்கு? 

தமிழக மக்களுக்கு ஒரு நடிகரை பிடிக்க வேண்டுமென்றால், சினிமாவில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிஜ வாழ்வில், ஒரு நல்லவராக மனதில் பதிய வேண்டும். திறமையை காட்டுபவரை விட, நல்லவராக காட்டுபவரையே, உயரத்தில் வைப்பார்கள். எந்த திட்டமிடலும் இல்லாமல், அஜித்திற்கு அது அதுவாகவே நடக்கிறது. 

இசை யுவன்சங்கர் ராஜா. வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி பற்றி சொல்லவே வேண்டாம். நான்காம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது இந்த கூட்டணி. 'அம்பானி பரம்பர' பாட்டுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது ரீரிக்கார்டிங்கில் தூள் கிளப்பி இருக்கிறார் யுவன். குறிப்பாக எதிரிகள் மீது தீப்பிடித்து எரியும்போது அஜித் மேலிருந்து ஜம்ப் செய்யும் காட்சியில் வரும் வயலின் எக்ஸ்ட்ரார்டினரி. 

கேமிரா மேன் சக்தி சரவணன் படத்தின் கதைக்கேற்ற டோனில் நன்றாக செய்திருக்கிறார். படத்தின் முக்கியபலம் எடிட்டிங் அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள் பிரவீன் மற்று ஸ்ரீகாந்த் இருவரும். மும்பை தாராவி பகுதியா இல்லை செட்டா என்று கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் ஆர்ட் டைரக்டரை பாராட்டுவதா வேண்டாமா என்று தெரியவில்லை.

பலவீனம் என்று பார்த்தால், பாடல்கள் நன்றாக இருந்தாலும் மெலடி பாடல்கள் படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 'பின்லேடா' பாடலில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது. மற்றபடி மங்காத்தா கலக்கலான மேட்ச்தான்.